மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு தோண்டி, ஒரு ஆண்டு ஆகியும், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெள்ளேபாளையம் ஊராட்சி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமுகை பேரூராட்சி அருகே அமைந்துள்ள ஊராட்சி பெள்ளேபாளையம். இந்த ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு என தனி குடிநீர் திட்டம் இல்லை. மூளையூர் குடிநீர் திட்டத்தில் இருந்து தினம், எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதை, 12 வார்டுகளுக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது, எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பவானி ஆறு அருகே இருந்தும், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இந்த ஊ ராட்சிக்கு என, தனி குடிநீர் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆலாங்கொம்பில் பவானி ஆற்றில், நீர் உறிஞ்சும் கிணறு அமைப்பது. கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அதை எலகம்பாளையத்தில் அமைக்கும், சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்வது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில், ஆலாங்கொம்பில் பவானி ஆற்றில், நான்கு மீட்டர் விட்டம் கொண்ட நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டது. எலகம்பாளையத்தில் சுத்திகரிப்பு நிலைய கட்டடம், குடிநீர் தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. ஆலாங்கொம்பில் நீர் உறிஞ்சும் கிணற்றில் மின் மோட்டார் அமைத்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஆனால் எலகம்பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையத்தில், இன்னும் மின் இணைப்பு பெறவில்லை, பில்டர் அமைக்கவில்லை. தனி குடிநீர் திட்டத்தில், ஆற்றில் கிணறு அமைத்து, ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் மக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவில், சுத்திகரிப்பு நிலையத்தில் பில்டர் அமைத்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கூறினர். இதுகுறித்து பெள்ளேபாளையம் ஊராட்சி செயலரிடம் கேட்டபோது,' எலகம்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் பில்டர் அமைக்க, மதிப்பீடு தயார் செய்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான தொகை வந்தவுடன் பில்டர் அமைத்து மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்,' என்றார்.