தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: ஒத்துழைக்காத பேரூராட்சிகள்
பொள்ளாச்சி: தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளிலும், சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கால்நடைத்துறை வாயிலாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி கால்நடை டாக்டர் தலைமையிலான குழுவினர், இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மூன்று வார்டுகளுக்கு ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள தெருநாய் களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தெரு நாய்களை பிடித்து தருவதற்காக, முன் கூட்டியே பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தினர், நாய்களை பிடித்துத் தர, போதிய பணியாளர்களை நியமிப்பது கிடையாது என்றும், வற்புறுத்தி கோரினால் ஒன்றிரண்டு நாய்களை, பெயரளவில் பிடித்து தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கால் நடைத்துறையினர் கூறியதாவது: பேரூராட்சி செயல் அலுவலருக்கு முன் கூட்டியே உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இருந்தும், வார்டுகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க பணியாளர்களை நியமிப்பதில்லை. ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், அனைத்து தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல, வீடுகளில் வளர்க்கும் நாய், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்த, குடியிருப்புவாசிகள் இடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. இதனால், கால்நடை டாக்டர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். இவ்வாறு, கூறினர்.