உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடகிழக்கு பருவ மழை தீவிரம்.. போதுமான உரம் கையிருப்பு; வேளாண் துறையினர் தகவல்

வடகிழக்கு பருவ மழை தீவிரம்.. போதுமான உரம் கையிருப்பு; வேளாண் துறையினர் தகவல்

பெ.நா.பாளையம்; கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், விவசாயத்துக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு, 351.7 மி.மீ., பெய்துள்ளது. தற்போது, ராபி பருவத்துக்கு தேவையான யூரியா, 2,591 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 895 மெட்ரிக் டன், பொட்டாஷ், 3,848 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ், 3,765 மெட்ரிக் டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், 1619 மெட்ரிக் டன் என மொத்தம், 12 ஆயிரத்து, 718 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ள நீர் தேங்கியுள்ள விளை நிலங்களில் உடனடியாக நீரை வடிகட்டி, சரியான வடிகாலுக்கு வகை செய்தல் வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இள மஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிர்களுக்கு இலை வழி உரமாக ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் இரண்டு கிலோ யூரியாவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேகமூட்டமான வானிலை காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ளது. வெள்ள மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த மருந்துகளை பயன்படுத்தலாம். மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்ற, 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை, 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி கரைசலுடன், 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தினை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி விவசாயிகள் ஆலோசனை பெறலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி