உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையுடன் மருத்துவ கழிவு அனுப்பிய தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்

குப்பையுடன் மருத்துவ கழிவு அனுப்பிய தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்

கோவை; கோவையில் குப்பையுடன் மருத்துவ கழிவை சேர்த்து அனுப்பிய, தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்புவதோடு, அபராதம் விதிக்கவும், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.உக்கடம் அன்பு நகரில், குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு செயல்படுகிறது. இப்பகுதிக்கு மருத்துவ கழிவுகளை ஆட்டோவில் கொண்டு வந்து கொட்டுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கண்டுகொள்ளவில்லை. இச்சூழலில், அன்பு நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னொருவர் சிகிச்சையில் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.இச்சூழலில், மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் பூபதி தலைமையிலான அலுவலர்கள், குப்பை கிடங்கில், நேரில் ஆய்வு செய்தனர். வழக்கமான குப்பையுடன், மருத்துவ கழிவும் கலந்து கிடங்கிற்கு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பவும், அபராதம் விதிக்கவும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.

மூன்று வண்ண தொட்டிகள்!

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மனைகளில் குப்பை கையாள பச்சை, மஞ்சள், வெள்ளை என, மூன்று நிற தொட்டி பயன்படுத்துவர். மருத்துவ கழிவை சேகரிக்கும் தனியார் நிறுவனத்திடம் வழங்க வேண்டும். வழக்கமான குப்பையை சேகரிக்கும் நிறுவனத்திடம் வழங்கும் குப்பையோடு, மருத்துவ கழிவும் வந்திருக்கிறது. பொது சுகாதார சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வினியோகித்துள்ளோம்; அபராதம் விதிக்கப்படும். மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
டிச 17, 2024 05:36

அப்படியே கேரளாவிலிருந்து வரும் மருத்துவ கழிவிற்கும் ஏதாவது செய்யுங்க . சோதனைச்சாவடியில் சொந்த மாநிலத்திற்கு எதிராக செயல்படும் கழிவுகளை பணிநீக்கம் செய்யுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை