உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கோவை; மாநில ஜி.எஸ்.டி., தாக்கல் செய்வதில் காலதாமதம், விதி மீறல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு, கோவை மாவட்டத்தில் பல ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.இதற்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: கொடிசியாவில் உள்ள உறுப்பினர்களுக்கு, கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை, 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் அனுப்பி இருப்பது, 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கான நோட்டீஸ். இது குறித்து, சென்னையில் உள்ள மாநில ஜி.எஸ்.டி. கமிஷனரிடம் பேசிய போது, இவை பெரும்பாலும் உள்ளீட்டு வரி கிரெடிட் (input tax credit) சம்பந்தமான நோட்டீஸ் என்றனர். சிறு, குறு மற்றும் தொழில் செய்பவர்கள் குறிப்பாக, 5 ஊழியர்களுக்கும் குறைவாக வைத்து குறுந்தொழில் செய்பவர்கள், அறியாமல் செய்யும் சிறு தவறுகள்தான் இது. இதற்காக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி, பெரிய தொகையை அபராதம் விதிக்கின்றனர். இது அவர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் இருக்கிறது என்றால், அதற்கு ஆகும் செலவுகளை கணக்கில் எடுத்து கொள்ளலாம். ஆனால் அந்த பில்லில் உள்ள ஜி.எஸ்.டி., தொகையை எடுத்துக்கொள்ள கூடாது. இது தெரியாமல் சிலர் கணக்கில் எடுத்துள்ளனர். ஜி.எஸ்.டி., விதிபடி இது தவறுதான். இதற்குதான் நோட்டீஸ் அனுப்பி அபராதம் போடுகின்றனர். இதனால் குறுந்தொழில் செய்வோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ