உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை பேரூராட்சி நிர்வாகங்கள் ஏற்க இயலாது பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவிப்பு

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை பேரூராட்சி நிர்வாகங்கள் ஏற்க இயலாது பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவிப்பு

சூலுார் : 'ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை, பேரூராட்சி நிர்வாகங்கள் ஏற்க இயலாது,' என, பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவித்துள்ளார்.ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளை அந்தந்த பேரூராட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் இயக்ககம் முடிவு செய்தது. பள்ளிகளை ஒப்படைக்குமாறு கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. மாவட்ட கலெக்டர்களால், ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க செயல் முறை ஆணைகள் பிறப்பிக்கவும் இயக்ககம் அறிவுறுத்தி இருந்தது.மேலும், பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டடங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சிகள் பெற்றுக்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், பேரூராட்சிகளின் இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், பேரூராட்சிகளின் இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை இயக்குனருக்கு அளித்த பதிலில், 'ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை, பேரூராட்சிகள் எடுத்துக்கொள்வது குறித்து அரசாணை ஏதும் இதுவரை பெறப்படாததால், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டுமானம், பராமரிப்பு உள்ளிட்டவைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை போலவே தொடர்வதால், இது தொடர்பாக, பேரூராட்சிகளுக்கு அறிவுரை எதுவும் வழங்க இயலாது,' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ