‘பார்’ ஆக மாறிய சத்துணவு மையம்
வால்பாறை: வால்பாறையில், யானைகள் இடித்து சேதமடைந்த பள்ளி சத்துணவு மையம் ‘குடி’மகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி ரோப்வே அரசு தொடக்கப்பள்ளியில், 12 மாணவர்கள் படிக்கின்றனர். வனப்பகுதியை ஒட்டி இந்தப்பள்ளி அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் யானைகள் பள்ளி வளாகத்தில் புகுந்து, சத்துணவு மையத்தை இடித்து சேதப்படுத்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இடிந்த சத்துணவு மைய கட்டடத்தை சீரமைக்காமல், நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள் கூறியதாவது: சத்துணவு மையத்தை யானைகள் தாக்கியதில், கதவு மற்றும் ஜன்னல் சேதமடைந்துள்ளது. இதனால் சத்துணவு சமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சத்துணவு மையத்திற்கு கதவு, ஜன்னல் உள்ளிட்ட எதுவும் இல்லாததால், இரவு நேரத்தில் ‘குடி’மகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலையில் சத்துணவு சமைக்கும் முன், சமையல் அறையில் சிதறி கிடக்கும் மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகள், உணவு பொட்டலங்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. இது குறித்து, நகராட்சி கவுன்சிலர், அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு, கூறினர். நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ‘‘அய்யர்பாடி ரோப்வே பள்ளி சத்துணவுக்கூடம், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் சீரமைக்கப்படவுள்ளது. தற்போது டெண்டர் விட மன்றக்கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் புதிதாக சத்துணவு மையம் கட்டும் பணி துவங்கப்படும்,’’ என்றார்.
இரண்டு பள்ளிகளுக்கு
ஒரே இடத்தில் சமையல்அய்யர்பாடி ரோப்வே தொடக்கப்பள்ளியில், 12 மாணவர்களும்; கவர்க்கல் அரசு துவக்கப்பள்ளியில், 14 மாணவர்களும் படிக்கின்றனர். இதனால், நாள் தோறும் அய்யர்பாடி துவக்கப்பள்ளியில் சத்துணவு சமைத்து, மூன்று கி.மீ.,தொலைவில் உள்ள கவர்க்கல் துவக்கபள்ளிக்கு, நாள் தோறும் அரசு பஸ்சில் பணியாளர்கள் எடுத்து செல்கின்றனர். சத்துணவு மையங்களில் ஊழியர் பற்றாக்குறையால், ஒரே பள்ளியை சேர்ந்த அமைப்பாளர்கள், இரண்டு பள்ளி மாணவர்களுக்கும் சமைத்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.