உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்

கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்

பெ.நா.பாளையம்: நாயக்கன்பாளையம் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் போதுமான அளவு வராததால், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கிராம சபை கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், 15 தீர்மானங்களை விவாதித்து நிறைவேற்ற ஏற்கனவே அறிக்கை அளிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் குறைந்த அளவில் வருகை தந்திருந்தனர். இக்கூட்டத்தில் உள்ளாட்சி துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட அலுவலர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். கிராம நிர்வாக அலுவலர், வனத்துறையினர், மின்சாரம், கல்வி, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சின்னராஜ் கூறுகையில்,கிராம ஊராட்சியில் நிலவும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் அந்தந்த பகுதி சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும், பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக, நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வனவிலங்குகளின் தொல்லை அதிகம். இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும், ஆலோசனை வழங்கவும் வனத்துறையினர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். ஆனால், கிராம சபை கூட்டத்தில் வனத்துறையினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதே போல பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாதது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார். கூட்டத்தில் மிகக் குறைந்த அளவு பொதுமக்களே கலந்து கொண்டனர். இதே போல பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு வெகு குறைவாகவே இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !