காரமடை நகராட்சி குப்பை கிடங்கில் அதிகாரிகள் அளவீடு
மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சி குப்பை கிடங்கில், குவிந்துள்ள குப்பைகளை, மறு சுழற்சிக்கு பயன்படுத்த, அதிகாரிகள் குழுவினர் அளவீடு செய்தனர்.காரமடை நகராட்சியில், தினமும், 15 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இக்குப்பைகள் அனைத்தும், அம்பேத்கர் நகர் அருகே உள்ள குப்பை கிடங்கில், கொட்டப்பட்டு வருகின்றன. குப்பைகளை தரம் பிரித்து, மறு சுழற்சிக்கு பயன்படுத்த, குப்பைக் கிடங்கில், குவித்து வைத்துள்ள, 13 ஆயிரம் கன மீட்டர் குப்பைகளை, நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டது.இதில் டெண்டர் எடுத்தவர், முதல் கட்டமாக 8,000 கன மீட்டர் குப்பைகளை எடுத்து தரம் பிரித்து வைத்துள்ளார். மீதமுள்ள ஐந்தாயிரம் கன மீட்டர் குப்பைகளை எடுத்து தரம் பிரிக்க, டெண்டர் எடுத்தவர், நகராட்சியில் அனுமதி வேண்டி இருந்தார்.நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில்,மேற்பார்வையாளர் சிவக்குமார், அதிகாரிகள், அண்ணா பல்கலை சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு அளவீடு செய்யும் குழுவினர் ஆகியோர் குப்பை குவியலை அளவீடு செய்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் குழுவினர் கூறியதாவது: குப்பையில் இருந்து பிரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும், அதிலிருந்து பிரித்த கழிவு பொருட்கள், குழிகளை மூடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் குப்பையில் பிரிக்கப்படும் மண்ணில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. நகராட்சி குப்பை கிடங்கில், ஐந்தாயிரம் கன மீட்டர் குப்பைகள், ஒப்பந்ததாரருக்கு அளவீடு செய்யப்பட்டது. விரைவில் அவர் எடுத்துச் செல்ல இருப்பதை அடுத்து, குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பைகள் விரைவில் காலியாகும். இதனால் நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.