இன்று ஓணம் பண்டிகை கோலாகலம்; ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கோவை; ஓணம் பண்டிகையையொட்டி, சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை இன்று நடைபெறும். ஐய்யப்ப சுவாமிக்கு காலை 5.00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7.30க்கு சீவேலி, 9.00 மணிக்கு பந்திரடி பூஜை, 10.00 மணிக்கு உஷ பூஜை நடைபெறும். சுவாமிக்கு சம்பங்கி, செவ்வந்தி, துளசி ஆகியவைகளை நாரில் தொடுத்து அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் நெய் தீபங்களால் துாண்டா விளக்கு ஏற்றப்படும். தங்கக்கொடி மரத்தருகே துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செண்டுமல்லி, மல்லி மலர்களை கொண்டு அத்தப்பூக்கோலம் ஒன்பது வரிசைகளில் போடப்படும். கோவில் கருவறைக்கு பின் பகுதியிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஓணம் பண்டிகையையொட்டி, கோவிலில் உள்ள அன்னதானக்கூடத்தில் ஓணசத்யா விருந்து பரிமாறப்படும். மூன்று வகை அவியல், ஊறுகாய், பாயாசம், வேகவைத்த வாழைப்பழம், நேந்திரன் சிப்ஸ் உள்ளிட்ட கேரள பாரம்பரிய உணவுகள் இடம் பெறும். சிறப்பு வழிபாடுகளுக்கும், சிறப்பு விருந்துக்கும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுவதால். கோவில் கொடி மரத்தருகே நெல்மணிகளை வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படும். கேரள மக்களால் ஜாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்; அம்மாநில மக்கள் கோவையிலும் அதிகமாக வசிப்பதால், இங்கும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.