நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு: நிறைவேறியது நீண்டநாள் கோரிக்கை
சூலூர்: நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சூலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை பிரித்து, நீலம்பூரை தலைமையிடமாக கொண்டு, புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்., மாதம் சட்டசபையில், நீலம்பூரில் ரூ.4.80 கோடி ரூபாய் செலவில் புதிய ஸ்டேஷன் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, சூலூர் ஸ்டேஷனுக்கு உட்பட்ட நீலம்பூர், அரசூர், முத்துக்கவுண்டன்புதூர், ராசிபாளையம் ஆகிய ஊராட்சிகளும் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கீழ் இருந்த, வெள்ளானைப்பட்டி ஊராட்சி, அன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கீழ் இருந்த நாரணாபுரம், பச்சாபாளையம் ஊராட்சிகள், நீலம்பூர் ஸ்டேஷனுக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ., க்கள், 46 போலீசாரை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது . அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கோதிபாளையத்தில் உள்ள, மகளிர் கூட்டமைப்பு கட்டடத்தில், புதிய ஸ்டேஷனை, முதல்வர் காணொளி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார். விழாவில்,மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., சசி மோகன், எஸ்.பி., கார்த்திகேயன், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன், முன்னாள் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில், நீலம்பூர் ஸ்டேஷனுக்கு கீழ், எட்டு தாய் கிராமங்கள், 23 குக்கிராமங்கள் உள்ளன. தற்போது, எஸ்.ஐ., உட்பட, 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக சுற்றுவட்டார கிராமங்களில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் முடியும், என்றார்.