நகராட்சியுடன் ஆச்சிபட்டியை இணைக்க எதிர்ப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியுடன், ஆச்சிப்பட்டியை இணைக்க கூடாது, என, அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொள்ளாச்சி நகராட்சியுடன், ஆச்சிப்பட்டி, பணிக்கம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.இந்நிலையில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சார்பில், பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், ஆச்சிபட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டன.மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்வோர் பாதிப்புக்கு உள்ளாவர். வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரிகளால் நடுத்தர, ஏழை மக்களுக்கு சிரமம் ஏற்படும்.வீடற்ற ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, அரசியல் கட்சியினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.