தொழுகை நடக்கும் இடத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு
அன்னுார்; தொழுகை இடத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி 238 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இதில் அன்னுார் நகரில் பஸ் ஸ்டாண்ட் எதிரே தொழுகை மைதானத்தில் மார்க்கிங் செய்யப்பட்டு எல்லை கல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று மதியம் கையெழுத்து இயக்கம் துவங்கியது. ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்று முதல்வருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். 'சாலையின் வடக்கே 30 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளபோதும் தெற்கு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தொழுகை நடத்தி வரும் சிறிய பகுதியை கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். தற்போது பள்ளிவாசல் வளாகத்தில் போராடுகிறோம். அடுத்தகட்டமாக வீதியில் இறங்கி போராடுவோம். அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும்,' என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் ஜமாத் தலைவர் முகமது முசீர், செயலாளர்கள் மொயின், அக்பர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.