ஆழியாறில் பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு; அக்., 15 வரை 152 நாட்களுக்கு வழங்க உத்தரவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆனைமலை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. அதில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கன், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.நடப்பாண்டு, அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதையடுத்து, நேற்று ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, மாவட்ட கலெக்டர் பவன்குமார், தண்ணீர் திறக்கப்பட்டது.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர் கோகுல் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.மாவட்ட கலெக்டர் கூறியதாவது:ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட, 6,400 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக, இன்று (நேற்று) முதல், அக்., 15ம் தேதி வரை பாசன நீர் வழங்கப்படுகிறது. இதற்காக, ஆழியாறு அணையில் இருந்து தொடர்ந்து, 152 நாட்களுக்கு, 1,205 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.ஆழியாறு அணையில் நீர் மட்டம், 74.70 அடியாக உள்ளது. 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட போதுமான அளவு தண்ணீர் அணையில் இருப்பு உள்ளது. சுற்றுலா பயணியர், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, ஆழியாறு அணை, தடுப்பணை பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினார்.