100 வார்டுகளில் சிறப்பு கூட்டம் இடங்கள் தேர்வு செய்ய உத்தரவு
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், அந்தந்த கவுன்சிலர்கள் மற்றும் உதவி/ இளம் பொறியாளர்கள் தலைமையில், 27, 28, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன், வார்டு கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கினார். அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்கள் வந்து செல்வதற்கு சவுகரியமான இடத்தை தேர்வு செய்து உடனடியாக பட்டியல் அனுப்ப வேண்டும். சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்ய பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். வார்டு முழுவதும் ஆட்டோக்களில் மைக்கில் முன்னறிவிப்பு வெளியிட வேண்டும். அக்கூட்டங்களில், தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள, குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, பூங்கா, சாலை, மழை நீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட ஒன்பது பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும். பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை பதிவேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம், மூன்று முக்கிய கோரிக்கைகளை மட்டும் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வார்டுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் ஒதுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. அந்நிதியில் வார்டுக்கு மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்' என்றனர்.