மாநகராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்துதல் பணிகளை விரைந்து முடிக்க வந்தது உத்தரவு
தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சிகளில், வரும் 30ம் தேதிக்குள், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி, 100 வார்டுகளுடன் அமைந்துள்ளது. கோவை நகரம், தொழில், கல்வி, நிறுவனங்கள் என, அனைத்து துறைகளிலும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதால், இங்கு மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்துள்ளது.இதனால், மாநகராட்சி மற்றும் மாநகராட்சியை ஒட்டியுள்ள பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும், தேவையான வளர்ச்சிகளை ஏற்படுத்த, சில பகுதிகளை மாநகராட்சியுடனும், பேரூராட்சிகளை நகராட்சியாகவும், ஊராட்சிகளை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதில், கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலூர் பேரூராட்சிகள், சோமையம்பாளையம், சின்னியம்பாளையம், குருடம்பாளையம், நீலாம்பூர், மயிலம்பட்டி, அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய 9 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.அதோடு, பேரூர் செட்டிபாளையம், அரசூர், கணியூர் ஆகிய ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சிகளில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். புதிய பணிகள் எதும் மேற்கொள்ளக்கூடாது; நூறுநாள் வேலை திட்டப்பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.