ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற கோவை மாவட்ட வீரர், வீராங்கனைகள்
கோவை : மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் கோவை வீரர், வீராங்கனைகள் என, இரு பாலரும் ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' வென்றனர்.ஈரோடு வ.உ.சி., ஸ்டேடியத்தில், 39வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. இதில், அனைத்து மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 700 பேர் குண்டு எறிதல், ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் ஜோசப், செயலாளர் வேலுசாமி தலைமையில் வீரர்கள், 166 பேர், வீராங்கனைகள், 98 பேர் என, 264 பேர், 30 முதல், 95 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.ஒருவர் நான்கு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. நிறைவில் வீரர்கள், 456 புள்ளிகளுடனும், வீராங்கனைகள், 539 புள்ளிகளுடனும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள், மைசூரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டனர்.