ஜூஸ் வாங்கிக்கொடுத்து ஓவியத்தை பாராட்டிய பாலக்காடு டாக்டர்
'அட... இது ரொம்ப நல்லாயிருக்கே...' என்று, பார்ப்பவர்கள் எல்லாம் கோவை கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள, வனக்கல்லுாரி வளாக சுற்றுச்சுவரை பார்த்துச் செல்கின்றனர்.கேரளாவை சேர்ந்த ஓவியர் குழுதான் இதற்கு காரணம். சுவர்களில் மரம், செடி, கொடிகளை, கைவண்ணத்தால் நிறைத்து, வனத்தை நினைவுப்படுத்தும் இயற்கை ஓவியங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள் என, பல காட்சிகளை வண்ண ஓவியங்களாக, தீட்டியுள்ளனர். வனக்கல்லுாரிக்குள் உள்ள காஸ் மியூசியம், வனமரபியல் அலுவலக கட்டடம் மற்றும் வனக்கல்லுாரி கட்டடம் என, பல ஓவியங்கள் சுற்றுச்சுவரை அலங்கரிக்கின்றன.ஓவியர்கள் சஜி மற்றும் சிவராஜ் கூறுகையில், 'தமிழக மக்கள் ஓவியங்களை விரும்பி ரசிக்கின்றனர். வாகனங்களை நிறுத்தி, வரைபவரை பார்த்து பாராட்டிச் செல்கின்றனர். இதை எங்களுக்கான அங்கீகாரமாகவே பார்க்கிறோம். காரில் வந்த பாலக்காடை சேர்ந்த டாக்டர் ஒருவர், எங்களுக்கு பழரசம் வாங்கி கொடுத்து, பாராட்டிச்சென்றார்' என்றனர்.