உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.ஏ.பி., கால்வாயில் சைடு போர் போடுறாங்க...சொல்வதெல்லாம் உண்மையே!நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பி.ஏ.பி., கால்வாயில் சைடு போர் போடுறாங்க...சொல்வதெல்லாம் உண்மையே!நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:'பி.ஏ.பி., கால்வாய் அருகே சைடு போர் போடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.விவசாயிகள் கூறியதாவது:கேரளாவில், நெல் குவிண்டாலுக்கு, 2,900 ரூபாய் கொடுக்கின்றனர். ஆனால், தமிழகத்தில், 2,400 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.நெல் அறுவடை சீசன் நேரத்தில், வேளாண் பொறியியல் துறை வாயிலாக இயந்திரம் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு தனியாரிடம், 2,500 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும்; அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால், 900 ரூபாய் செலுத்தினால் போதுமானது. எனவே, இப்பகுதிக்கு என, இயந்திரம் ஒதுக்க வேண்டும்.மேலும், ஆனைமலை, சமத்துார், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், கொப்பரை உற்பத்தி செய்ய உலர்களம் தேவைப்படுகிறது. அரசு சார்பில் உலர்களம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆனைமலை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வெப்பரைபதி ரோடு மோசமாக உள்ளதால், மாணவர்கள், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மை நோய் தாக்குதலால் மாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, கால்நடைத்துறை அதிகாரிகள், தடுப்பூசி செலுத்தி, கால்நடைகளை காக்க முன்வர வேண்டும். காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால், விளை பயிர்கள் நாசமாகி நஷ்டம் ஏற்படுகிறது. இதற்குரிய தீர்வை காண வேண்டும்.கிராம இணைப்புச் சாலைகள் மோசமாக உள்ளன; அவற்றை சீரமைத்தால் விவசாயிகள், விளை பொருட்களை எடுத்துச் செல்ல பயனாக இருக்கும்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், கால்வாய்களில் கசிவுநீர் அதிகளவு செல்கிறது. இதை பயன்படுத்தி பல இடங்களில், 'சைடு போர்' அமைத்து தண்ணீர் திருடப்படுகிறது. இதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு புறவழிச்சாலை பணிகள் பாதியிலயே நிற்பதால், பஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் வருவதில்லை. மாணவர்கள், கிராமத்தில் இருந்து பஸ்சுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.கொப்பரைக்கு விலை நிர்ணயம் செய்வதற்கு முன், விவசாயிகளிடம், புள்ளியியல் துறை அதிகாரிகள் கருத்து கேட்க வேண்டும். உண்மையான நிலவரத்தை கேட்டு, அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யலாம். மேலும், கொப்பரைக்கு மாற்றாக தேங்காயை கொள்முதல் செய்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, சேத்துமடை, பீடர் கால்வாய்களின், 'அ' மண்டலம், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், 'ஆ' மண்டல பகுதிகளில் பாசனம் நடைபெற உள்ள நிலையில், கிளை கால்வாய்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் துார்வார பணி ஆணை வந்துள்ளது.ஆழியாறு புதிய பாசனத்துக்கு வழக்கமான அக்., அல்லது நவ., மாதத்தில் நீர் திறக்கப்படும். எனவே, பாசன நீர் திறப்புக்கு முன், இந்த கால்வாய்களை துார்வார வேண்டும். அதற்கேற்ப கால நீட்டிப்பு செய்து பணி வழங்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.சப்-கலெக்டர் பேசுகையில், 'விவசாயிகள் தெரிவித்த குறைகள், கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ