உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரம்பிக்குளம் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு; இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பரம்பிக்குளம் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு; இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 70 அடியாக உயர்ந்ததையடுத்து, இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே, கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி.,- திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணையில், 72 அடி உயரத்தில், 17 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம். இந்த அணையில் சேகரிக்கும் நீர், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதி கொண்டு சென்று, மின் உற்பத்தி செய்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை கைகொடுத்ததால் முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டும் பருவமழை தீவிரமாக பெய்ததால் அணைக்கு நீர்வரத்து இருந்தது.தொடர் பருவமழை மற்றும் சோலையாறு அணையில் இருந்து நீர் வரத்தால், பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.கடந்த, 10ம் தேதி, 62.48 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததும், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கடந்த, 18ம் தேதி, 67.30 அடியாக உயர்ந்ததையடுத்து, இரண்டாம் கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை நிலவரப்படி, 70.12 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. வினாடிக்கு, 1,203 கனஅடி நீர் வரத்து இருந்தது. வினாடிக்கு, 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தொடர் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர்மட்டம், 70 அடியை எட்டியதால், இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக - கேரள எல்லையில் ஆற்றோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்து, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பை பொறுத்து உபரிநீர் திறக்கப்படும். தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை