கோவை தனியார் பள்ளிகளில் ஹிந்தி மயம்: அரசுப்பள்ளிகளிலும் வர பெற்றோர் விருப்பம்
கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மூன்றாம் மொழிப்பாடமாக, 70 சதவீதம் ஹிந்தி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்ய ஏழை மாணவர், பெற்றோரிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், ஐந்தாம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப்பாடமாகவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய பாடமாகவும் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 18 சி.பி.எஸ்.இ., நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.தவிர, 44 உயர்நிலை, 89 மேல்நிலை பள்ளிகள், மூன்று கேம்பிரிட்ஜ், இரண்டு சர்வதேச பள்ளிகள், 16 ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் என, 172 பள்ளிகள் செயல்படுகின்றன. மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை, 12 நடுநிலை, 25 உயர்நிலை, 228 மேல்நிலை என, 265 பள்ளிகளும், 167 நர்சரி மற்றும் பிரைமரி, 144 பிளே ஸ்கூல்கள் என, 756 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 70 சதவீதம் மூன்றாவது மொழிப்பாடமாக ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஜெர்மன், பிரெஞ்ச் பாடங்கள் சில பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 1,247 பள்ளிகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கோவை மாவட்டத்தில் பயில்கின்றனர். இப்பள்ளிகளிலும் ஹிந்தி கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர், பெற்றோரிடம் எழுந்துள்ளது. ஹிந்தி மீது விருப்பம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கோவையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பெரும்பாலும்(70 சதவீதம்) மூன்றாவது மொழிப்பாடமாக ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது. இரண்டாவது மொழிப்பாடமாக ஹிந்தி எடுப்பவர்கள், மூன்றாவது மொழிப்பாடமாக தமிழை தேர்வு செய்கின்றனர்.பிரெஞ்ச் பாடம், 50 முதல், 70 பள்ளிகளில் இருக்கும். வட மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்கள், ஹிந்தி மொழி தொடர்பு தேவைக்காக, தமிழை தேர்வு செய்கின்றனர். இதேபோல், ஹிந்தியை இங்குள்ளவர்கள் பயில விரும்புகின்றனர்' என்றனர்.
சென்று பார்த்தால் தெரியும்
பெயர் குறிப்பிட விரும்பாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'தமிழகத்தை விட்டு வெளியே சென்றால், ஹிந்திதான் தொடர்பு மொழியாக உள்ளது. பணி நிமித்தமாக சென்று வருபவர்களுக்குதான், அதன் அருமை தெரியும். அதையும் தாண்டி அரசுப் பணி, கல்வி நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, ஹிந்தி உதவியாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் இம்மொழி அறிமுகம் செய்யப்பட்டால், ஏழை மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்' என்றனர்.