நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தம் பாதசாரிகள் பரிதவிப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்ட இடங்கள், 'கார் பார்க்கிங்' நிறுத்தமாக மாறி வருகிறது. பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக சென்று திரும்பும் வகையிலும், ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அஞ்சலக ரோடு, தாலுகா ரோடு, உடுமலை ரோடு பகுதிகளில், மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைபாதையொட்டிய பகுதியில், பாதுகாப்பு தடுப்புக்கம்பி அமைக்கப்படவில்லை. நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பாதசாரிகள், பாதுகாப்பின்றி ரோட்டில் நடந்து செல்கின்றனர். அதிலும், பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில், ரோடு வரை கடைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நடைபாதையை கார் பார்க்கிங் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். காந்திசிலை பகுதியில், 'நோ பார்க்கிங்' என, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி வாகனங்களை நிறுத்துகின்றனர். மக்கள் கூறியதாவது: ரோடுகளை விரிவுபடுத்தி, விபத்தில்லா பயணம் மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பயனில்லாமல் உள்ளது. பாதசாரிகளுக்கான நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, எந்தவொரு அதிகாரியும் கவனம் கொள்வதில்லை. சிலர், நடைபாதை வரை கடைகளை விரிவுபடுத்தியும், வாகனங்கள் நிறுத்தி வைத்தும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். நடைபாதையை மீட்டுத்தர துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம். அதேபோன்று, 'நோ பார்க்கிங்' பகுதி, முக்கிய சந்திப்பு, வளைவு பகுதிகளில் அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.