உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு ரயில் அறிவிப்பில் சொதப்பல்! பயணிகள் கடும் அதிருப்தி

சிறப்பு ரயில் அறிவிப்பில் சொதப்பல்! பயணிகள் கடும் அதிருப்தி

கோவை: தீபாவளியை முன்னிட்டு, கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சிறப்பு மெமு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல், அலட்சியப்போக்குடன் சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக, அதிருப்தி எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதியைக்கருத்தில் கொள்ளாமல், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக, கோவை தொழில்துறையினர், பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல்லுக்கு கோவையில் இருந்து, 17, 18, 21, 22ம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே மக்களின் வசதிக்காக இச்சேவை அறிவிக்கப்பட்டிருந்தால், குறைந்தது மூன்று நாள்களுக்கு முன்பே, இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். 17ம் தேதி காலை 9:35 மணிக்கு புறப்படும் ரயில் குறித்த அறிவிப்பு, 16ம் தேதி இரவு வெளியாகிறது. இது மக்களை எப்படி சென்றடையும்? போத்தனூர், கிணத்துக் னாகடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். வழியில் உள்ள மக்கள், பஸ் நெரிசலைத் தவிர்க்க இந்த ரயிலைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் இந்த ரயில், தீபாவளிக்கு முந்தைய நாளான 19ம் தேதியில் இயக்கப்படவில்லை. அன்றுதானே கூட்டம் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் கூடவா ரயில்வே நிர்வாகம் கவனிக்காது? அதிக வருவாய் வரும் பகுதியாக, கோவை இருந்தபோதும், இப்பகுதியை ரயில்வே நிர்வாகம் அலட்சியமாகவே கையாள்கிறது. மக்களுக்குச் சேவை செய்வது குறித்து கொஞ்சமும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

சஷ்டி வருவதால்vரயிலை நீட்டிக்கணும்

தீபாவளியை முடிந்ததும், 22ம் தேதியில் இருந்து சஷ்டி விரதம் தொடங்குகிறது. 27ம் தேதி சஷ்டியின் முக்கிய தினமான சூரசம்ஹாரம். இதற்காக பழனிக்கு ஏராளமான பக்தர்கள் செல்வர். எனவே, இந்த ரயிலை 22ம் தேதியுடன் நிறுத்தி விடாமல், சஷ்டிக்காக பழனி செல்லும் பக்தர்களின் வசதி கருதி, தொடர்ந்து நீட்டிக்க வேண்டும். இந்த அறிவிப்பையாவது முன்கூட்டியே வெளியிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !