கோவை அரசு மருத்துவமனையில் கழுத்தறுத்து நோயாளி தற்கொலை
கோவை; கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். சீரநாயக்கன்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராணி, 40. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பன்னீர்செல்வம் அடிக்கடி குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனைவி, பன்னீர் செல்வத்தை பிரிந்து, சொந்த ஊருக்கு சென்று விட்டார். பன்னீர் செல்வம் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தாயாருடன் வசித்து வந்தார்.இந்நிலையில், பன்னீர்செல்வம் காச நோயால் பாதிக்கப்பட்டு, சிங்காநல்லுாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் , சிகிச்சை பெற்று வந்தார். உயர் சிகிச்சைக்காக 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காச நோய் சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 15ம் தேதி 'நகம் வெட்டும் கருவியால்' அவரது கழுத்தை அறுத்துக் கொண்டார். சக நோயாளிகள் டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.