மரக்கழிவு கொட்ட வந்த வாகனத்துக்கு அபராதம்
பொள்ளாச் : பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் மயானத்தில் மரக்கழிவுகளை கொட்ட வந்த வாகனத்துக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் மயானத்தில், வெளியில் இருந்து கொண்டு வந்து குப்பையை கொட்டுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.அங்கு குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுவதுடன், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வருவோரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், கழிவு கொட்ட வந்த வாகனத்துக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வடுகபாளையம் மயானத்தில், செடி மற்றும் மரக்கழிவுகளை கொட்ட வந்த தனியார் வாகனத்தைப்பிடித்து, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு செய்யப்படும். விதிமீறி குப்பை கொட்டுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.