ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு
ஆனைமலை; '70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், வட்டக்கிளை மாநாடு, ஆனைமலை பரிமளம் திருமண மண்டபத்தில் நடந்தது. வட்டக்கிளை தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். முன்னதாக, துணைத் தலைவர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் மதன், மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டக்கிளை செயலாளர் பழனிசாமி அறிக்கை வாசித்தார். வட்டக் கிளை பொருளாளர் விஜயகுமார், வரவுசெலவு அறிக்கை வாசித்தார். மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநில துணைத் தலைவர் அரங்கநாதன் நன்றி கூறினார்.