உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொத்தல், பொத்தலானது மதுக்கரை மார்க்கெட் ரோடு: அவஸ்தைப்படும் மக்கள்; அதிகாரிகள் பாராமுகம்

பொத்தல், பொத்தலானது மதுக்கரை மார்க்கெட் ரோடு: அவஸ்தைப்படும் மக்கள்; அதிகாரிகள் பாராமுகம்

கோ வை நகர் பகுதியில், 16 சாலைகளை விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, தமிழக அரசு ரூ.140 கோடி ஒதுக்கியது. அதில், சுந்தராபுரம் அருகே மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், 1.8 கி.மீ., துாரத்துக்கு ரூ.10.5 கோடியில் நான்கு வழிச்சாலையாக்கும் பணி, 2022ல் துவங்கி, 2023ல் முடிக்கப்பட்டது. அப்போது, பாதசாரிகளுக்கு நடைபாதை, மையத்தடுப்பு, மின் விளக்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மையத்தடுப்பு, மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை ஏற்படுத்தவில்லை. ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஏற்கனவே இருந்த ரோட்டின் மையத்தில் தடுப்பு கற்கள் வைத்திருப்பதால், ரோடு சுருங்கியுள்ளது. ரோட்டோரத்தில் ஏதேனும் வாகனம் நின்றிருந்தால், மற்ற வாகனங்கள் கடந்து செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து, அபிராமி மருத்துவமனை வரை பல்லாங்குழி போல், ரோட்டில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன. சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அக்குழி பெரிதாகி பள்ளமாகியுள்ளது. மழை நீர் தேங்கியிருப்பதால், குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். மருத்துவமனை அருகே சாலை விபத்து ஏற்பட்டு, போலீசாரால் அபாய எச்சரிக்கை குறியீடு போடப்பட்டுள்ளது. உயிர் பலி ஏற்படும் முன், சாலையை விரைந்து செப்பனிட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியினர் கூறுகையில், 'மதுக்கரை மார்க்கெட் ரோடு, இரண்டு ஆண்டுக்கு முன் விஸ்தரிக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையாக அமைய வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றாததால், குறுகலாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் இச்சாலையில் மீண்டும் பொத்தல் உருவாகியிருக்கிறது. பேட்ச் ஒர்க் செய்யாமல், தரமாக ரோடு போட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை