உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளை தரம் உயர்த்தியதற்கு மக்கள் அதிருப்தி! வரிகள் அதிகரிக்கும் என்பதால் வருத்தம்

ஊராட்சிகளை தரம் உயர்த்தியதற்கு மக்கள் அதிருப்தி! வரிகள் அதிகரிக்கும் என்பதால் வருத்தம்

சூலுார்: மக்களின் எதிர்ப்புகளையும் மீறி, பல ஊராட்சிகளை தரம் உயர்த்தியும், பல ஊராட்சிகளை நகர்புறத்தோடு இணைத்துள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டு வரி, குடிநீர் வரி என எல்லாம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் நாளையுடன் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஏற்கனவே நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன், அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பது, மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவது, என, அரசு முடிவு செய்திருந்தது. அதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தன. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதன்மூலம்,, சூலுார் ஒன்றியத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அதன்படி, சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூலுார் பேரூராட்சியுடன், அருகில் உள்ள கலங்கல், காங்கயம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. இதேபோல், பட்டணம், கணியூர், அரசூர் ஊராட்சிகள், மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப் பட்டுள்ளன. இதேபோல், இருகூர் பேரூராட்சி மற்றும் சின்னியம்பாளையம், நீலம்பூர், மயிலம் பட்டி ஆகிய ஊராட்சிகள், கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படுவது அரசாணை மூலம் உறுதியாகி உள்ளது.

சிதைக்கப்பட்ட ஊராட்சிகள்

பல மாதங்களாகவே ஊரக உள்ளாட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. நீலம்பூர், சின்னியம்பாளையம், மயிலம் பட்டி ஆகிய ஊராட்சி மக்கள், தாங்கள் ஊராட்சியாகவே தொடர வேண்டும், மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என, விருப்பம் தெரிவித்திருந்தனர். கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. இதேபோல், அரசூர், கணியூர், பட்டணம் ஊராட்சி மக்கள், பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டாம்; ஊராட்சியாகவே செயல்பட விருப்பம் தெரிவித்திருந்னர். தீர்மானமும் நிறைவேற்றின. ஆனால் மக்களின் கருத்துக்கு எதிராக, அரசாணை வெளியிட்டு, ஊராட்சிகள் சிதைக்கப்பட்டுள்ளதாக, ஊராட்சி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், ''குறைந்த வருமானம் கொண்ட எங்களுக்கு ஊராட்சியாகவே தொடரவிருப்பம் என தெரிவித்தோம். அதையும் மீறி ஊராட்சிகளை சிதைத்து பேரூராட்சி, மாநகராட்சியாக மாற்றி உள்ளனர். வீட்டு வரி, குடிநீர் வரி என எல்லாம் அதிகரிக்கும். அவற்றை எப்படி சமாளிப்பது என, தெரியவில்லை,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை