வீதிகளை ஆக்கிரமிக்கும் புதர் செடிகள்; அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட சில வீதிகளில், புதர்மண்டி கிடப்பதால், அவற்றை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், ஒவ்வொரு வீதிகளை இணைக்கும் வகையில், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடியிருப்பு வாசிகளின் வாகன போக்குவரத்து எளிதாகிறது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக பெய்த மழை காரணமாக காலி இடங்கள், சாலையோரம் என, செடிகள், கொடிகள் வளர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் எருக்கு, ஆமணக்கு உள்ளிட்ட செடிகளும் வளர்ந்துள்ளன. சாலையை மறைக்கும் இச்செடிகளால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மக்கள் கூறியதாவது: காலி இடங்கள் மற்றும் சாலையோரம் செடிகள் வளர்ந்துள்ளதால், சிலர், குப்பையை மூட்டையாக கட்டி வீசிச் செல்கின்றனர். ரோட்டோரம் குவியும் குப்பை காரணமாக, அவ்வழித்தடத்தை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த வரிசையில், சி.டி.சி., பணிமனை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில், வீதிகளை மறைத்து நிற்கும் செடிகளில் விஷ ஜந்துக்களும் காணப்படுகின்றன. சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, காலி இடங்களில் புதர்மண்டி கிடப்பதால், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரிக்கிறது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டு, புதர்களை அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில், இட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.