உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தபால் ஏ.டி.எம்., மெஷின் சேவை விரிவுபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு

 தபால் ஏ.டி.எம்., மெஷின் சேவை விரிவுபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: தபால் ஏ.டி.எம்., சேவையை பெற பலரும் முனைப்பு காட்டும் நிலையில், அதற்கான மெஷினை மக்கள் கூடும் இடங்களில் விரிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தபால்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், 2 தலைமை தபால் அலுவலகங்கள், 42 துணை அலுவலகங்கள், 164 கிளை அலுவலகங்கள் உள்ளன. இங்கு, சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்., வாயிலாக பணம் எடுக்கும் வகையில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை ஆகிய தலைமை தபால் அலுவலகங்களில் அதற்கான மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்., மெஷின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கூறியதாவது: தபால் ஏ.டி.எம்., சேவையை பெற பலரும் முனைப்பு காட்டுகின்றனர். தபால் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,யில் பணம் எடுக்கலாம். தபால் துறை ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பிற வங்கிகளின் ஏ.டி.எம்., மெஷின்களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கும் போதும், 23 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருந்தும், சில வாடிக்கையாளர்கள், தபால் ஏ.டி.எம்., மெஷின் பயன்படுத்தவே முற்படுகின்றனர். அதனால், பெரிய அளவிலான வணிக நிறுவன கட்டடங்கள், மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்கள் அருகில், ஏ.டி.எம்., மெஷின் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். தபால் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஏ.டி.எம்., மெஷின் அதிகளவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தபால் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி