இன்று சித்திரைக் கனி பழங்கள் வாங்க திரண்ட மக்கள்
பொள்ளாச்சி : சித்திரை மாதப் பிறப்பான இன்று, பிலவ ஆண்டு முடிந்து, சுபகிருது எனும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாரம்பரிய முறைப்படி வீடுகளில் சித்திரை கனி கண்டு கொண்டாட்டத்துடன், மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், 'சித்திரை கனி காணுதல்' எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடியும் வருகின்றனர்.தாம்பாளத்தட்டில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பிற பழங்கள், ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ரூபாய் நோட்டுக்கட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவை கடவுள் படத்தின் முன் வைக்கப்படும்.புத்தாண்டு காலை எழுந்தவுடன், தாம்பாளத் தட்டில் உள்ள கனிகளை பார்த்தபடி கண்விழிக்க வேண்டும். உணவில், இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என, அறுசுவை சமையல் செய்து, இறைவனுக்கு படைத்து உண்ண வேண்டும். வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டது என்பதை, இந்த உணவு பதார்த்தங்கள் உணர்த்துகின்றன.மேலும், வீட்டில் இருக்கும் முதியவர்கள், வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுத்து வாழ்த்தியும் வருகின்றனர்.அவ்வகையில், நேற்று, பொள்ளாச்சி நகரில், மக்கள், சித்திரை கனியை கொண்டாடும் வகையில், பழங்கள், காய்கறிகள் வாங்க ஆர்வம் காட்டினர். காலை முதலே கூட்டம், கூட்டமாக வந்து பூக்கள், பழங்களை வாங்கிச்சென்றனர்.அதன்படி, நேற்று, கிலோ ஆப்பிள் -230, ஆரஞ்சு -120, சாத்துக்குடி- 60, பன்னீர் திராட்சை -100, பச்சை திராட்சை -120 முலாம்பழம் -30, வெள்ளரி -40, பலாப்பழம் -70, அன்னாசி -70 ரூபாய்க்கு விற்பனையானது.