உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு வாசலுக்கு சிறுத்தை வருவதால்...  உயிர் பயம்!; திக்திக் மனநிலையில் வால்பாறை மக்கள்

வீட்டு வாசலுக்கு சிறுத்தை வருவதால்...  உயிர் பயம்!; திக்திக் மனநிலையில் வால்பாறை மக்கள்

வால்பாறை: வால்பாறையில், எஸ்டேட் பகுதிகள் அனைத்திலும் யானைகள் கூட்டம்கூட்டமாக சுற்றுகின்றன. மாலை, இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீட்டு வாசல் வரை, யானை, சிறுத்தை வந்து செல்வதால், மக்கள் உயிர் பயத்துடன் வாழ்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில், பசுமையான சோலைக்காடுகளும், புல் மலைகளும் அதிகம் உள்ளன. இதனால், தாவர உண்ணிகளான, யானை, காட்டு மாடு, மான் உள்ளிட்டவையும், தாவர உண்ணிகளை சார்ந்து வாழும், சிறுத்தை, புலி, செந்நாய் போன்ற விலங்குகளும் அதிகம் உள்ளன. யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டு, தேயிலை பயிரிட்டு உள்ளதாலும், 'ரிசார்ட்'கள் கட்டப்பட்டுள்ளதாலும், இயற்கையான வழித்தடங்கள் அழித்து, எஸ்டேட் குடியிருப்புக்குள் யானைகள் நுழைகின்றன. ரேஷன் கடை, மளிகை கடைகள், குடியிருப்புகளை சேதப்படுத்தி, உள்ளிருக்கும் பொருட்களை சேதப்படுத்துகின்றன. சில நேரத்தில், மனித - யானை மோதலால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்று கொன்றது. சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் சம்பவ இடத்தில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். வால்பாறையில் இந்த ஆண்டு இது வரை யானை தாக்கி 6 பேரும், சிறுத்தை தாக்கி மூன்று குழந்தைகளும், கரடி தாக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வன விலங்குகள் தாக்கி, 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர் சம்பவங்கள், தொழிலாளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் மட்டுமே முகாமிட்ட சிறுத்தை தற்போது மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகருக்குள்ளும் வரத்துவங்கியுள்ளன. அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாத நிலையில், நேற்று முன் தினம் இரவு, 10:00 மணிக்கு வெங்கடேஷ் என்பவரின் வீட்டு வாசலில் சிறுத்தை படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை முகாமிட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை அண்ணாநகரில் கடந்த மூன்று நாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளிடம் இருந்து அப்பகுதி மக்களை பாதுகாக்க தனித்தனியாக உள்ள தொழிலாளர் வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பை சுற்றிலும் மின் வேலி அமைக்க வேண்டும். அங்கிருந்து தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல தொழிலாளர்களை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் வாகனங்களில் அழைத்து செல்ல வேண்டும். வனவிலங்கு - மனித மோதலை தடுக்க, புதரை அகற்றி, எஸ்டேட் நிர்வாகங்கள், வனத்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, கூறினர்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், எரியாத தெருவிளக்குகளால் தான், சமீப காலமாக மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளது. வால்பாறை நகரிலும், எஸ்டேட் பகுதியிலும் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில், வால்பாறையில் எந்த சூழ்நிலையிலும் இரவு நேரத்தில் மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது. எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா போன்றவைகளை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல், சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி, ஆடுகள் வளர்ப்பதையும், தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். இதனால், வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், மாலை, இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். குடியிருப்புகளின் வெளியில் குழந்தைகளை விளையாட விடுவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி