சூரசம்ஹாரம் சிறப்பு ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவு: கோவையில் இருந்து பழநிக்கு சூரசம்ஹார தினத்தன்று, சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். சூரசம்ஹார நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று முருகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் முருக தரிசனம் செய்வர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோவையில் இருந்து பழநிக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழித்தடத்தில், மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர். சிறப்பு ரயில் இயக்கப்பட்டால், கோவையில் மருதமலை முருகர் கோவில், கிணத்துகடவில் உள்ள பொன்மலை முருகன் கோவில், முத்து மலை முருகன் கோவில், பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில், பழநி முருகர் கோவில் மற்றும் பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பக்தர்கள் சென்றுவர முடியும். மேலும், மூன்று நாட்கள் ரயில் இயக்கப்பட்டால், சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பக்தர்கள் ஒரு நாள் முன்பாக சென்று, சுவாமி தரிசனம் செய்து ஒரே நாளில் திரும்பி வர முடியும். எனவே, பக்தர்கள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.