கருமாண்டகவுண்டனுாருக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
பொள்ளாச்சி : தமிழக - கேரள எல்லை உள்ள கருமாண்டகவுண்டனுாருக்கு, பஸ் இயக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி கிளை 1ல், இருந்து, 26 புறநகர் பஸ், 34 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில், ஏழு டவுன்பஸ்கள், தமிழக - கேரள மாநில எல்லையொட்டிய கிராமங்கள் வழியே, கோபாலபுரம் வரை இயக்கப்படுகிறது.இதுதவிர, இரு தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஏதேனும் ஒரு டவுன் பஸ்சை, கோபாலபுரத்தில் இருந்து, 3 கி.மீ., துாரமுள்ள, கேரள மாநிலம் கருமாண்டகவுண்டனுார் வரை இயக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'சமீபத்தில், கேரள மாநிலத்தில், அதிகப்படியான தனியார் பஸ் இயக்கத்துக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், தமிழக அரசின் டவுன் பஸ்களை, துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோரின் முறையான அனுமதி பெறாமல், பிற மாநிலங்களுக்கு பஸ்களின் இயக்கத்தை நீட்டிக்க முடியாது,' என்றனர்.