மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வலியுறுத்தி மனு
வால்பாறை; மனித -- வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நா.த.க., வலியுறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, மாவட்ட தலைவர் குப்புசாமி ஆகியோர், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பாதுகாவலரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் வால்பாறை, தொண்டாமுத்துார் பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து, மனிதர்களை தாக்குகிறது. இதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் குழந்தைகளை குறி வைத்து சிறுத்தை வேட்டையாடுகிறது. யானைகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவதோடு, வீடு மற்றும் வாகனங்களை சேதப்படுத்துகிறது. வனவிலங்குகளால் மனித உயிர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை நீடிக்கிறது. எனவே வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராத வகையில், அகழி, சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து, மாற்றுப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். பழங்குடியின மக்களின் வாழ்வாதார உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் வேட்டை தடுப்புக்காவலர்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.