மேலும் செய்திகள்
ஆரோக்கியம் காக்கும் உணவு முறை அவசியம்!
04-Oct-2024
உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும் அக்., 10ம் தேதி (இன்று) உலக மனநல நாளாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, 'பணிபுரியும் இடங்களில் மன நலத்திற்கு முன்னுரிமை வழங்கும் காலம் இது' என்ற, கருப்பொருளாக கொண்டுள்ளது.ஒருவர் முழுமையான வேலை திறனை வெளிப்படுத்த அவர் உடலாலும், மனதாலும் முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, சுமார், 45 சதவீதம் பணியாளர்கள்(பொறுப்பு வேறுபாடின்றி) ஏதோ ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வேலைப்பளு சார்ந்த மன அழுத்தம் காரணமாக, மனச்சோர்வு, மனப்பதற்றம், அச்சம், எரிச்சல், கோபம், புலம்பல் ஏற்படுகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்கள், அழுகை, ஆத்திரம், உடல் பருமன் அல்லது எடை குறைவு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இது, அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவர்களின் வேலைத்திறன், வேலை சார்ந்து முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. எதனால் மனச்சோர்வு?
தன்னுடைய திறமைக்கும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும் இடையே ஏற்படும் இடைவெளியால் ஏற்படும் மன அழுத்தம் தவிர பணியிட சூழல், பணி நேரம், ஊதியம், பணியாளர் நலன்கள், தேவையான போது விடுமுறை கிடைக்காதது, சக ஊழியர்களின் ஒவ்வாமை, வாழ்வியல் முறை, குடும்பம், பொருளாதார பிரச்னை, சொந்த பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளுக்குள் குமுறும் மனநிலை...இவையே மன அழுத்தம், மனச்சோர்வை உருவாக்குகிறது.இது பல வருடங்கள் தொடர்ந்தால் அதுவே டென்ஷன், தலைவலி, முடி உதிர்தல், ஞாபக மறதி, இளநரை, எரிந்து விழுதல், தோற்றத்தில் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், நரம்பு சம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், வயிறு சம்பந்தமான பிரச்னைகள், உடல் பருமன், இடுப்பு வலி, கை கால் குடைச்சல், மூட்டு வலி போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. உதாசீனம் கூடாது
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது, பணியாளர்களுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்வது. அவர்களுடைய உடல் நலம், மனநலம், குடும்ப நலம் பற்றி பேசி, அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்தல் அவசியம். சக ஊழியர்கள் ஒரு நாள் சுற்றுலா(பிக்னிக்) செல்ல அனுமதித்தல், அவ்வப்போது அனைவரும் சந்தித்து பிரச்னைகளை பகிர்ந்து, சேர்ந்து உணவு உண்ணுதல் ஆகியவை தேவை.மன ஆரோக்கியம் இல்லாமல், உடல் ஆரோக்கியம் சாத்தியமில்லை. தினசரி சந்தோஷமாக வாழ்வதை தொலைத்துவிட்டு, என்றோ ஒரு நாள் அடையும் வெற்றிக்கு மனதை குழப்பிக்கொண்டு இருக்கக் கூடாது. வெற்றி நிச்சயம்
மிகவும் முக்கியமானது, பணியாளர்கள் தனிமனித ஒழுக்கம் பேணுவதும், சக ஊழியர்களிடம் ஒற்றுமையாக இருப்பதும். நிர்வாகம், எல்லா பணியாளர்களிடம் சரி சமமாக நடந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.தினசரி உடற்பயிற்சி, தியானம், யோகா, சரியான நேரத்தில் சரிவிகித உணவை உட்கொள்ளுதல், சரியான துாக்கம் மிக மிக முக்கியம். வருமானம்-, செலவினம் இவற்றிற்கு இடையில் சமநிலையை பேண வேண்டும்.-டாக்டர் மோனி, மனநல மருத்துவர், பாலாஜி மூளை, நரம்பியல் மற்றும் மன நல மருத்துவ மையம்.ஆர்.எஸ்.புரம்.
04-Oct-2024