மேலும் செய்திகள்
குழாய் உடைந்து குடிநீர் வீண்
13-Nov-2024
கோவை; கோவைபுதுார் பிரிவு ரோட்டில், தார் சாலை போடும் போது பில்லுார் குடிநீர் குழாய் உடைந்ததால், சாலையில் குடிநீர் வீணாக ஓடுகிறது. கோவை, பாலக்காடு ரோடு, கோவைபுதுார் பிரிவில் இருந்து தார் சாலை போடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த சாலை வழியாக குறிச்சி, சுந்தராபுரம் பகுதிக்கு, கோவைபுதுார் பிரதான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியிலிருந்து, ராட்சத குழாய் வாயிலாக குடிநீர் செல்கிறது. கோவைபுதுார் பிரிவு மேட்டில், சாலை போடும் போது, பில்லுார் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி, பாலக்காடு ரோடு, வலது புறத்தில் மைல்கல் வரை, வீணாக ஓடுகிறது.இது குறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள, அரை கிலோ மீட்டர் தொலைவில், தொண்டாமுத்துார் தொகுதி எம்.எல்.ஏ., வேலுமணியின் வீடு அமைந்துள்ளது. ஆனாலும், மூன்று நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை.
13-Nov-2024