பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பு; வாகன ஓட்டுநர்கள் திணறல்
வால்பாறை; வால்பாறை நகரில் அதிகரித்து வரும் பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். வால்பாறை நகரில் சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க. - அ.தி.மு.க. - நா.த.க. - த.வெ.க. உள்ளிட்ட கட்சியினர் காந்திசிலை, அண்ணாசிலையை மறைத்து விளம்பர பேனர் வைத்துள்ளனர். தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளதால், மக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், நகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடமான காந்திசிலை, அண்ணாசிலை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால், ஓட்டுநர்கள் கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்கு உள்ளாகின்றனர். அதனால், அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.