பயணியரை அச்சுறுத்தும் பிளக்ஸ்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி!
சேதமடைந்த மின்கம்பம்
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி தனியார் திருமண மண்டபம் பின்பக்கம், தனியார் லே - அவுட் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதை மின் வாரிய அதிகாரிகள் கவனித்து உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- முத்து, பொள்ளாச்சி. உருக்குலைந்த ரோடு
பொள்ளாச்சி, கெட்டிமல்லன்புதூரில் இருந்து நஞ்சேகவுண்டன்புதூர் மற்றும் அம்பராம்பாளையம் செல்லும் ரோடு, நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. ரோட்டை புதுப்பிக்க வேண்டி, அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு வழங்கியும் பலனில்லை. எனவே, மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- ஈஸ்வரன், பொள்ளாச்சி. நாய் தொல்லை
பொள்ளாச்சி, நாச்சிமுத்து வீதியில் குடியிருப்பு பகுதியில் அதிகளவு தெருநாய்கள் உலா வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து தெருநாய்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டேவிட், பொள்ளாச்சி. ரோட்டில் கழிவுநீர்
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில், பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே, இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-- ஆனந்த், பொள்ளாச்சி. விளம்பர பிளக்ஸ் அதிகரிப்பு
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், தனியார் விளம்பர பிளக்ஸ்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸ்கள் எப்போது வேண்டுமானாலும் காற்றுக்கு கீழே விழ வாய்ப்புள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணியர் அச்சத்துடன் உள்ளனர். இதை தவிர்க்க, பிளக்ஸ்களை அகற்ற வேண்டும்.- சந்துரு, பொள்ளாச்சி. நடைபாதையில் குப்பை
உடுமலை, - பழநி ரோடு அரசு குடியிருப்பு முன்பு பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் பாதையில் குப்பை போடப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இவற்றை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.- மோகன், உடுமலை. கடைகள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்டு நடைபாதையை ஆக்கிரமித்து வணிக கடைகள் பொருட்கள் வைப்பதற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் இடையூறாக உள்ளது.- வரதராஜன், உடுமலை. ரோடு சரியில்லை
உடுமலை, மாரியம்மன் கோவில் வீதியில் ரோடு குண்டும் குழியுமாக குறுகலாகவும் உள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, நெரிசலாகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் இருப்பதால் சிரமப்படுகின்றனர்.- கனகராஜ், உடுமலை. இருளில் ரோடு
உடுமலை, பழனியாண்டவர் நகரிலிருந்து ஜீவா நகர் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால் இரவு நேரங்களில் அவதிப்படுகின்றனர். இரவில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் திருட்டு பயத்துக்கும் ஆளாகின்றனர்.- ராகவன், உடுமலை. அடையாளம் இல்லை
முக்கோணத்திலிருந்து எரிசனம்பட்டி செல்லும் ரோட்டில் வேகத்தடைகள் அடையாளம் போடப்படாமல் இருப்பதால், அவ்வழியாக வாகனங்களில் செல்லும் வெளியூர் பயணிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- சந்திரமோகன், உடுமலை. மக்கள் அச்சம்
உடுமலை பசுபதி வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சண்டையிட்டு தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்துவதால் நிம்மதியில்லாமல் உள்ளனர். வாகன ஓட்டுநர்களை துரத்திச்செல்வதால், பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது.- வெங்கடேஷ், உடுமலை. விபத்தை ஏற்படுத்தும் கம்பிகள்
உடுமலை நகராட்சி பஷீர் அகமது லே அவுட் தரைப்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கம்பிகள் நீட்டி கொண்டு இருக்கிறது. இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் சரி செய்ய வேண்டும்.- செல்வம், உடுமலை.