சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டியில் சதம் அடித்து அசத்திய வீரர்கள்
கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'சி' உட்பட பல்வேறு மைதானங்களில் டிவிஷன் போட்டிகள் நடக்கிறது. இரண்டாவது டிவிஷன் போட்டியில், ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும், விஜய் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடின.முதலில் பேட்டிங் செய்த, ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 204 ரன்கள் எடுத்தனர். வீரர் செந்தில்வேல் அதிகபட்சமாக, 45 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர், 48.1 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 206 ரன்கள் எடுத்தனர்.வீரர் கார்த்திக், 64 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ஆதித்யா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். மூன்றாவது டிவிஷன் போட்டியில் சச்சின் கிரிக்கெட் கிளப் அணியும், கோவை காம்ரேட்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த சச்சின் கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 265 ரன்கள் எடுத்தது.வீரர்கள் ஹரிஷ், 117 ரன்களும், விஸ்வஜித், 53 ரன்களும், சிவ அழகு நாச்சியப்பன், 38 ரன்களும் விளாசினர். எதிரணி வீரர் மஹாராஜா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். கோவை காம்ரேட்ஸ் அணியினரோ, 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 252 ரன்கள் எடுத்தனர்.வீரர்கள் மஹாராஜா, 112 ரன்களும், ஸ்ரீராம், 40 ரன்களும், ஜான் பப்டிஸ்ட், 34 ரன்களும் குவித்தனர். எதிரணி வீரர் மணிகண்டன் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகின்றன.