போலீசார் கைவிட்ட வழக்கு; மீண்டும் விசாரிக்க உத்தரவு
கோவை; 11 ஆண்டுக்கு முன் போலீசாரால் கை விடப்பட்ட வழக்கை, மீண்டும் விசாரிக்க கோர்ட் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் 2010, ஜூன் 10ல், கோவை கோர்ட் வளாகத்திற்குள், பள்ளபாளையம் அருகேயுள்ள கள்ளிமடையை சேர்ந்த மாரி என்கிற விஜய குமார், 37, நோட்டீஸ் விநியோகித்தார். அதில், 'ஈழதமிழர்களை கொன்றழிக்க துணை போன எட்டப்பன் கருணாநிதியை, கட்டபொம்மனாக காட்ட செம்மொழி மாநாடா' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து, வக்கீல் சந்திரன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து மாரியை கைது செய்தனர். அவர் மீது கோவை ஜே.எம்:3, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2011 தேர்தலில் அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததால், மாரி மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக, அரசுக்கு அனுமதி கேட்டு ரேஸ்கோர்ஸ் போலீசார் கடிதம் எழுதினர். அரசு தரப்பில் பதில் அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. வழக்கை முடித்து வைப்பது தொடர்பாக பதில் அளிக்க புகார்தாரருக்கு, அப்போதைய இன்ஸ்பெக்டர் கணேஷ், 2014ல் நோட்டீஸ் அனுப்பினார். புகார்தாரர் தரப்பு வக்கீல் பி.ஆர்.அருள்மொழி, அதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், சாட்சி விசாரணை நடத்தாமல் போலீசாரே கை விடுவது தவறானது. தனிபுகார் மனு பெற்று, மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார். தனிபுகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கை மீண்டும் விசாரிக்க, மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார் அனுமதியளித்தார். 11 ஆண்டுக்கு முன் போலீசாரால் கைவிடப்பட்ட இந்த வழக்கில், வரும் 12ல் சாட்சி விசாரணை துவங்குகிறது.