உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

முதியவர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே, வக்கம்பாளையம் வசந்தம் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 67. இவரது இரண்டாவது மகனின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். மகனின் வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை என, மன உளைச்சலில் இருந்தவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

சூதாடியவர்கள் கைது

ஆனைமலை, ராமபுரம் வீதி வாட்டர் டேங்க் அருகே, காலியிடத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பணம் வைத்து சூதாடிய, ஆனைமலையை சேர்ந்த சூர்யா,30, ஆனந்தகுமார்,38, நாகேந்திரன்,33, பாபு,36, ஜீவானந்தம்,52, ராஜமாணிக்கம்,47, பாஸ்கரன்,47, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 52 சீட்டுகள், 5,900 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விபத்தில் வாலிபர் பலி

உடுமலை, மின்நகரை சேர்ந்தவர் கோகுல்நாத்,32. இவர், பெங்களூரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அந்தியூர் - கொங்கல்நகரம் ரோட்டில் சென்ற போது, ரோட்டின் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பி.ஏ.பி., கிளை கால்வாயில் கவிழ்ந்தது. அதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து, கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை மிரட்டல்; தொழிலாளி கைது

வால்பாறை அடுத்துள்ளது ஊசிமலை எஸ்டேட் மட்டம். இங்கு, பணியாற்றும் லத்தீஸ் என்பவரது மனைவி வினிதா. இதே எஸ்டேட்டில் பணியாற்றுபவர் ரவி,48.குடிபோதையில் இருந்த ரவி, வினிதாவிடம் தகாத வார்த்தையால் பேசி, கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து வினிதா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை