உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

விபத்தில் ஒருவர் காயம்

சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம், 55, டீ கடை பணியாளர். இவர், மனைவி பத்மாவதியுடன் பைக்கில் நெகமம் பகுதியில் தனியார் பள்ளி அருகே சென்ற போது, எதிரே அஜாக்கிரதையாக வந்த அடையாளம் தெரியாத கார் பைக் மீது மோதியது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் தேடுகின்றனர்.

கால்வாய் நீரில் ஒருவர் மாயம்

திருமூர்த்தி அணை அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாயில், திருமூர்த்திநகரை சேர்ந்த முருகானந்தம்,43, என்பவர் குளிக்க சென்றார். அப்போது, கன்று குட்டி மிதந்து வந்ததால், அதனை காப்பாற்றுவதற்காக, கால்வாயில் குதித்துள்ளார். எதிர்பாராதவிதமாக அவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். உறவினர்கள், கால்வாயில் தண்ணீரை நிறுத்தி, முருகானந்தத்தை மீட்க வேண்டும் என, அணை மற்றும் தளி போலீஸ் ஸ்டேஷனில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, உடுமலை தீயணைப்பு துறையினர் முருகானந்தத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரோட்டை கடந்தவர் விபத்தில் பலி

சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் குப்புசாமி, 48, கடந்த, சில மாதங்களாக உடல்நல சிகிச்சையில் இருந்தார். இவர், கடந்த, 10ம் தேதி இரவு நேரத்தில், பொள்ளாச்சி -- பல்லடம் ரோடு, நெகமம் அருகே உள்ள தனியார் உணவகம் முன்பாக ரோட்டைக் கடந்த போது, எதிர்பாராத விதமாக அவ்வழியில் வந்த பஸ், அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே குப்புசாமி இறந்தார். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மளிகை கடையில் திருட்டு

ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் ஞானதுரை,48. இவர், மளிகை கடை நடத்துகிறார். நேற்றுமுன்தினம் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்க்க கடையை பூட்டி விட்டு மதுரைக்கு சென்றார்.நேற்றுமுன்தினம் இரவு, கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், 10 ஆயிரம் ரூபாய் பணம், கோதுமை, துவரம்பருப்பு, ஆயில் பெட்டி போன்றவை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து, ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !