உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

லாட்டரி விற்றவர் கைது

பொள்ளாச்சி அருகே, திவான்சாபுதுார் மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில், ஆனைமலை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கேரளாவில் இருந்து சந்தேகப்படும்படி நடந்து வந்த நபரை பரிசோதனை செய்தனர். விசாரணையில், பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ்,72, என்றும், விற்பனைக்காக கேரளா மாநிலத்தில் இருந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 400 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் டிரைவர் காயம்

ஆனைமலை அருகே, பெரியபோது பகுதியை சேர்ந்த சபரிவிக்னேஷ்,31, பால் வண்டி டிரைவராக உள்ளார். நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் ஆலாங்கடவு பிரிவு அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் சென்று ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த சபரி விக்னேஷ், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

பக்தர்கள் 4 பேர் காயம்

ஆனைமலை அருகே, சோமந்துறை சித்துாரை சேர்ந்தவர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டு இருந்தனர். துறையூர் மேடு பேக்கரி அருகே சென்று கொண்டு இருந்த போது, அரசூரை சேர்ந்த டிரைவர் பொன்னுசாமி,60, அதிவேகமாகவும், கவனக்குறைவாக டெம்போ ஓட்டி வந்து, பழநி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதினார். விபத்தில், சோமந்துறைசித்துாரை சேர்ந்த சிவகுமார்,36, சிவரஞ்சினி,35, முருகாத்தாள்,38 ஆறுவயது சிறுவன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தோர் கோவை சிங்காநல்லுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து, ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி, 63, விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடி பழக்கத்தை நிறுத்தும்படி டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால், பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார். இது பற்றி தனது மனைவி அன்னபூரணியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெருமாள்சாமி, சிகிச்சை பயனின்றி இறந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மது விற்ற இருவர் கைது

கிணத்துக்கடவு போலீசாருக்கு, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு ஆர்.எஸ்., ரோடு அருகே கூடலூரை சேர்ந்த மணிகண்டன், 45, என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து, 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போன்று, முள்ளுப்பாடி ரயில்வே பாலம் அருகே, கரூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயக்குமார், 43, என்பவரிடமிருந்து, 23 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைதனர்.

விபத்தில் லாரி டிரைவர் பலி

வடசித்தூரை சேர்ந்தவர் சம்பத்குமார், 42. லாரி டிரைவரான இவர், வேலையை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, வடசித்தூர் ரோட்டின் ஓரத்தில் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதை கவனிக்காமல் லாரியின் பின்பகுதியில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே சம்பத்குமார் இறந்தார். இது பற்றி நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 58, கூலி தொழிலாளி. இவர், புளியங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நெகமம் அருகே உள்ள மஞ்சம்பாளையம் தனியார் தோட்டத்தில் புளிய மரத்தில், புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ