தொண்டையில் மிட்டாய் சிக்கிய குழந்தைக்கு போலீசார் சிகிச்சை
கோவை; தொண்டையில் மிட்டாய் சிக்கி மயக்கமடைந்த குழந்தைக்கு முதலுதவி செய்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றினர். மேட்டுப்பாளையம் - போத்தனுார் இடையே மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காரமடையைச் சேர்ந்த செல்வலட்சுமி, தன் 2 வயது குழந்தை தேவ் ஆதிரனுடன் காரமடையில் இருந்து போத்த னுாருக்கு பயணித்தார். குழந்தை சாப்பிட்ட மிட்டாய் அதன் தொண்டையில் சிக்கியது. இதனால் குழந்தை மூக்கில் இருந்து ரத்தம் வந்தது மட்டுமல்லாமல், குழந்தை மயக்க நிலைக்கு சென்றது. பதற்றமடைந்த செல்வலட்சுமி, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். ரயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தையை தலை கீழாக கவிழ்த்து, முதுகில் தட்டினர். இதில், தொண்டையில் சிக்கிய மிட்டாய் வெளியில் வந்து விழுந்தது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. ரயில் கோவை வந்ததும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சமயோசிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு செல்வலட்சுமி நன்றி தெரிவித்தார். பயணியர் போலீசாரை பாராட்டினர்.