உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தானில் பங்கேற்று ஓடிய போலீசார் 

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தானில் பங்கேற்று ஓடிய போலீசார் 

கோவை: கோவை மாநகர போலீஸ் மற்றும் கோவை மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சார்பில் 'ரன் பார் டிரக் பிரீ கோவை' என்ற பெயரில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. மராத்தான் ஓட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இருந்து துவங்கிய மராத்தான், பாலசுந்தரம் சாலையில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி வரை சென்று, அங்கிருந்து 'யு - டர்ன்' செய்து, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து, ரேஸ்கோர்ஸ் சுற்றி மீண்டும் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் போலீசார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 3கி.மீ., 5கி.மீ., 7கி.மீ., ஆகிய மூன்று பிரிவுகளில் மராத்தான் நடந்தது. மராத்தானில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கலெக்டர் கிராந்தி குமார், எஸ்.பி., கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் அசோக் குமார், சுகாசினி, சரவணகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று ஓடினர்.

நாம்தான் மீட்க வேண்டும்'

மராத்தானை துவக்கி வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், '' நமக்கு போதைப்பொருட்கள் பழக்கம் இல்லை என்று ஒதுங்கி இருந்துவிடக்கூடாது. நம் குடும்பத்தினர், நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு போதைப்பழக்கம் இருந்தால், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் பயன்பாட்டினால், ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும். பழக்கத்தை கைவிட அறிவுரை வழங்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை