பொள்ளாச்சி இளநீருக்கு புவிசார் குறியீடு தேவை!
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கப்பளாங்கரையில் சமுதாய நலக்கூட்ட கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியம், கப்பளாங்கரை ஊராட்சியில் புதிதாக, 1.27 கோடி மதிப்பீட்டில் (ஆதி திராவிடர் நிதி) சமுதாய நலக்கூட கட்டடம் கட்ட, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி வைத்தார்.இதில், ஊராட்சி தலைவர் தேவி, ஊராட்சி பணியாளர்கள், தி.மு.க., வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.எம்.பி., கூறியதாவது: லோக்சபா குளிர்கால கூட்டத் தொடரில், தமிழகத்தின் நிதி சார்ந்த மற்றும் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.முக்கியமாக, பொள்ளாச்சியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் நிலையம், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது.பொள்ளாச்சி இளநீருக்கு தனி சிறப்பு உள்ளது. இதில், ஏற்றுமதி தரம் வாய்ந்த இளநீருக்கு புவிசார் குறியீடு தேவை எனவும், பொள்ளாச்சி பகுதியில் நலிவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் வலியுறுத்தப்படும்.இவ்வாறு, கூறினார்.