மத்திய ரயில்வே அமைச்சருக்கு பொள்ளாச்சி எம்.எல்.ஏ., கடிதம்
பொள்ளாச்சி; கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, ரயில்வே அமைச்சருக்கு பொள்ளாச்சி எம்.எல்.ஏ., கடிதம் அனுப்பியுள்ளார். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி தொகுதி கோவில்பாளையம், ஆச்சிப்பட்டி, செட்டிபாளையம் பகுதிகளில், செயல்பட்டுக் கொண்டிருந்த ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறந்து, பயணியர் ரயில் அங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பயணியர் ரயிலை, மேட்டுப்பாளையம் வரையும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் பயணியர் ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயிலை ஆனைமலை ரோடு வழியாக பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்துார் செல்லும் பயணியர் ரயிலில் கூடுதல் 'ஏசி' மற்றும் 'ரிசர்வேஷன்' பெட்டிகளை இணைத்து, பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வேண்டும். பொள்ளாச்சி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் மீது ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.