வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி துவக்கம்: வீடு வீடாக செல்லும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நேற்று துவங்கியது. தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, 100 சதவீதம் தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்த பணி, பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் நேற்று துவங்கியது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் பின்பகுதியில் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், விண்ணப்ப படிவத்துடன் வழங்க வேண்டிய ஆவணங்கள் வரிசையில், கடந்த ஜூலை மாதம் தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட, சிறப்பு தீவிர திருத்த பட்டியலின் பிரதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'வாக்களார் பட்டியலில் உள்ள அனைவரது வீட்டுக்கும் அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதுடைய அனைவரையும் கட்டாயமாக வாக்காளர்களாக்க வேண்டும். கடந்த, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி, தற்போதுள்ள பட்டியல் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். இதற்காக அவர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற வேண்டும். அதில் உள்ள தகவல்களை சரிபார்த்து ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். வாக்காளர்கள் வீடு பூட்டியிருந்தாலோ, வேலைக்கு சென்று இருந்தாலோ வேறு ஒரு நாளில், படிவம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீடு படிவத்தில் அவர்களது முழு விபரங்கள், அரசு அறிவித்துள்ள ஆவணங்களை வழங்க வேண்டும்.கணக்கீட்டு படிவத்துடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களின் குறிப்பான பட்டியல் (முழுமையானது அல்ல), வாக்காளர் தனது சுயவிபரம், அவரது தந்தை மற்றும் தாய்க்கு சமர்பிக்க வேண்டிய சான்றளிக்கப்பட்ட ஆணவங்களை சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.