பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
--- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.* பொள்ளாச்சி, திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், பொங்கல் திருவிழாவை, நகராட்சி கமிஷனர் கணேசன் துவக்கி வைத்தார். கல்லுாரி தலைவர் சேதுபதி, துணை தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவ, மாணவியரின் தேவராட்டம், வள்ளிக்கும்மி, மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. * நெகமம் சின்னேரிபாளயைம் சுவஸ்திக் மெட்ரிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், கோலப்போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைடெபற்றன. மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் தீபா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* கோபாலபுரம் முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி நிர்வாகிகள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். அதன் பின், பொங்கல் குறித்த உரையாடல், பாடல், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.* பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொங்கல் விழாவில், பள்ளி முதல்வர் சந்திராதேவி வரவேற்றார். தாளாளர் சாந்திதேவி, பொங்கல் விழா குறித்து பேசினார். தொடர்ந்து, 108 போற்றிகள் கூறி கோமாதா பூஜை நடந்தது. வள்ளி கும்மி, 'காராள வம்சம்' கலைச்சங்கத்தால் அரங்கேற்ற விழா நடந்தது. அதில், 65 கும்மி கலைஞர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாணவர்களால் நடத்தப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கும்மியாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் அறங்காவலர் உமாதேவி, பள்ளிச்செயலர் ரமேஷ் ராஜ்குமார், பள்ளி நிர்வாக இயக்குனர் ரிதன்யா மற்றும் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி டாக்டர் மனிஷ் ஆன்கோ பெஸ்ட் கேன்சர் சென்டர் வாயிலாக, ஆனைமலை ரோடு நஞ்சேகவுண்டன்புதுாரில், புற்றுநோயிலில் இருந்து மீண்டு வந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் விழா நடந்தது.அதில், கலாசார நிகழ்ச்சிகள், உயிர் பிழைத்தவர்களின் சான்றுகள் மற்றும் பொங்கல் விருந்து நடந்தது. இந்த முயற்சி பலரை ஊக்குவிக்கும் என்றும், புற்றுநோய் மீட்பு பணயத்தில் சமூக ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் என்ற நோக்கில் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.விழாவில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசுகையில், ''பொங்கலை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அட்வான்ஸ் ஸ்டேஜில் உள்ளவர்கள் கூட மீட்கப்பட்டுள்ளனர். ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால், 100 சதவீதம் குணமடையலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.டாக்டர்களை கலந்தாலோசித்து, மாத்திரை வாயிலாக, குணமடையலாம். உயர்தர சிகிச்சைகள் எல்லாம் வந்தாச்சு; கேன்சர் வந்தது என கவலைப்பட தேவையில்லை,'' என்றார்.நிகழ்ச்சியில் டாக்டர் மணிவண்ணன், சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, நகராட்சி கமிஷனர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், சமத்துவ பொங்கல் விழா முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமையில் நடந்தது.விழாவில், கல்லுாரி மாணவ, மாணவியர் தனித்தனி பாடப்பிரிவுகளாக பொங்கல் வைத்தும், பேண்ட் வாத்தியம், மேள தாளத்துடன் பொங்கல் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடினர். விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். உடுமலை
உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ரவீந்திரன் கெங்குசாமி துவக்கி வைத்தார். உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும், தமிழர்களின் பண்பாட்டுத்திருவிழா நடந்தது.பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், தேவராட்டம், கும்மி நடனம், குறவன் குறத்தி நடனம், சிலம்பாட்டம், கிராமிய பஞ்சாயத்து, வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சலகெருது ஆட்டம், ஜல்லிக்கட்டு போன்ற கிராமிய பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது.பெற்றோர்களும், மாணவ, மாணவியரும் பாரம்பரிய உடையணிந்து வந்து, கிராமிய நடனங்களை ஆடினர். பெற்றோர்கள் சமத்துவ பொங்கல் வைத்தனர். மேலும், கோலப்போட்டியில் பங்கேற்றனர். மாணவர்கள், பெற்றோர்களுக்கு, செயலாளர் நந்தினி, முதல்வர் சகுந்தலாமணி ஆகியோர் பரிசு வழங்கினர்.